TRAFFIC
இந்த தளத்தில் நான் பதிவிட்டு 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவத்தை பதிவிடலாம் என்று மனதுக்குள் கம்போஸ் செய்து வைத்திருந்தேன்...
ஆனால் டைப் செய்ய பொறுமை இல்லாததால் மற்ற வேலைகளில் கவனம் திரும்பியதால் தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது....
போக்குவரத்தில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக ஒவ்வொருவருக்கும் மோசமான அனுபவங்கள் நிறைய இருக்கும்..
எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை தான் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்..
2014 ஆம் வருடம் மார்ச் மாதம் எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்போது மே மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து இருந்தன.
எனது மகள் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். அன்று காலை 9.30 க்கு அவளுக்கு இரண்டாவது செமஸ்டர் தேர்வு காலை 8 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள எனது வீட்டிலிருந்து எனது காரில் கூட்டிச் செல்வது வழக்கம் சரியாக 45 நிமிடங்களில் கல்லூரிக்கு சென்று அடையலாம்.. காலையில் எனது மனைவியையும் மகளையும் அழைத்து காரில் சென்று கொண்டிருந்தோம்
தூத்துக்குடி மதுரை நான்கு வழி சாலை மதுரை ரிங் ரோட்டில் சேரும் இடத்தில் கருப்பசாமி கோயில் தாண்டி ஏர்போர்ட்டுக்கு அருகில் வலது பக்கம் திரும்பும் இடத்தில் திருமங்கலத்தில் இருந்து ஒரு சிங்கிள் ரோடு சந்திக்கும். அந்த இடத்திற்கு சரியாக எட்டு 35 மணிக்கு சென்றடைந்தோம்
எனக்கு முன்பு ஒரு van செல்லும்போது போக்குவரத்து உதவி ஆய்வாளரும் ஒரு போலீஸ்காரரும் வாகனத்தை நிறுத்தினார்கள். நானும் ஏதோ போக்குவரத்து நெரிசல் என்று எண்ணி இன்ஜினை ஆஃப் செய்யாமல் பொறுமையாக காத்திருந்தேன்.. பத்து நிமிடங்கள் கழிந்தன அதற்குள் எனது வாகனத்தின் இடது புறம் ஏராளமான டூவீலர் பின்பு திரும்பி பார்த்தால் ஏகப்பட்ட வாகனங்கள்..
லேசாக பயம் தொற்றிக் கொண்டது . இன்ஜினைஆப் செய்து விட்டு இறங்கி முன்சென்று விசாரித்தேன்.
ஏர்போர்ட்டில் இருந்து ஏதோ ஒரு முக்கிய விஐபி இந்த ரோட்டில் கடந்து செல்கிறார் என்பதற்காக போக்குவரத்துநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்து கொண்டேன்..
காத்திருந்தேன் மணி ஒன்பதை கடந்துவிட்டது காருக்கு திரும்பி வந்து எனது மகளிடம் ஹால் டிக்கெட்டை வாங்கி சென்று அந்த கான்ஸ்டபிள் இடம் அவசரமாக பரிட்சைக்கு செல்ல வேண்டும் என்பதை கூறினேன் அவர் புரிந்து கொண்டு தயக்கத்துடன் எஸ் ஐ யிடம் போய் சொல்லுங்கள் என்று கூறினார்...
எனது மனைவி அவளுக்குத் தெரிந்த இஷ்ட தெய்வங்கள் அனைவரையும் வேண்டுதல் செய்ய ஆரம்பித்து விட்டாள்.நானும் அந்த உதவி ஆய்வாளரிடம் சென்று கூறினேன். அவர் பார்த்த பார்வையிலேயே பள்ளிக்கல்வியை தாண்டாதவர் என்பது புரிந்து கொண்டேன். மிகஅலட்சியமாக கேட்டுக் கொண்டவர் எரிச்சலுடன் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.. அடுத்து என்ன செய்வது என்பது புரியவில்லை மீண்டும் அந்த கான்ஸ்டபில் இடம் சென்றேன்.. நிச்சயம் கல்லூரி படிப்பை முடித்து விட்டு தான் இந்த வேலைக்கு வந்திருக்க வேண்டும் அவரது பேச்சில் எனது ஆதங்கமும் வலியும் புரிந்து கொண்டார் என்று உணர்ந்தேன்.. அவரும் சென்று உதவி ஆய்வாளரிடம் கேட்டார்...
உதவி ஆய்வாளர் திரும்பி அவரை முறைத்துப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார். அந்தக் காவலர் மீண்டும் என்னிடம் என்னிடம் வந்து என்ன சார் செய்வது என்று சொல்லிவிட்டு தயக்கத்துடன் நின்றார்.. பின்பு ஒரு நிமிடம் யோசித்து எனது வாகனத்திற்கு முன்பு இருந்த வேன் டிரைவரிடம் வாகனத்தை சற்று இடது புறம் ஒதுக்கி எனது வாகனத்திற்கு வழி விடுமாறு என்று கூறிவிட்டு சார் நீங்கள் உங்கள் வாகனத்தை எடுத்து சொல்லுங்கள் என்று கூறினார்..
நானும் பதற்றத்துடன் அவருக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு வாகனத்தை எடுத்து மெதுவாக முன்னேறிச் சென்றேன். அடுத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த வாகனமும் எனது பின்பும் எதிரிலும் வரவில்லை மண்டேலா நகர் பஸ் ஸ்டாப்பை நெருங்கும் போது தூரத்தில் ஒரு பெரிய போலீஸ் பட்டாளம்...
அந்த பஸ் நிறுத்தத்திற்கு 100 மீட்டர் முன்பு வரும்போது போலீஸ் எனது வாகனத்தை நிறுத்தி விட்டார்கள்..
நான் வண்டியை விட்டு இறங்காமல் எனது மகளிடம் ஹால் டிக்கெட்டை கொண்டு போய் அங்கு நிற்கும் போலீசு அதிகாரியிடம் போய் சொல்லு என்று கூறினேன் அவள் 100 மீட்டர் தூரம் நடந்து சென்று அவரிடம் பேசினாள்...
அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு ஹால் டிக்கெட்டை வாங்கி பார்த்தார். பின்பு எனது வாகனத்தை திரும்பிப் பார்த்து வருமாறு சைகை அழைத்தார். நான் மிக மெதுவாக வாகனத்தை இயக்கி அவர் அருகில் சென்றேன் அவரே கதவைத் திறந்து எனது மகளை உட்கார வைத்து ஆல் தி பெஸ்ட் என்று கூறி உயர் அதிகாரிக்கு மரியாதை செலுத்துவது போல் அட்டென்ஷன்ல நின்று சல்யூட் செய்தார். சற்று திகைப்புடன் மகிழ்ச்சியுடன் எனது வாகனத்தை மெதுவாக இயக்கி கல்லூரிக்கு சென்றேன். சரியாக 9:30 மணிக்கு அவள் தேர்வு அறைக்கு சென்று விட்டாள். அந்தத் தேர்வை எழுதாமல் இருந்திருந்தால் ஒரு வருடம் கல்வி தள்ளிப் போயிருக்கும்..
.
தேர்வு முடிய இரண்டரை மணி காலம் வரை யார் அந்த விஐபி இவ்வளவு நேரம் போக்குவரத்தை கட்டுப்படுத்தி மக்களை கஷ்டப்படுத்தினார்களே என்று மனதில் பலவிதமான யோசனை.
தேர்வு முடிந்து திரும்பினோம்.. பெருங்குடியில் போஸ்டல் அகாடமி அருகே உள்ள சாலை ஓர இளநீர் கடையில் வாகனத்தை நிறுத்தினேன் இளநீர் வாங்கி குடித்தோம்...
இளநீர் வியாபாரியிடம் காலை ஒரு மணி நேரமாக போக்குவரத்தை தடை செய்தார்களே யார் வந்தார்கள் என்று விசாரித்தேன் அவரும் ஆமா சார் ரொம்ப நேரம் டிராபிக் ஜாம் மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள் என்று புலம்பி கொண்டு யார் என்று தெரியவில்லை என்று கூறினார்.. இளநீர் குடித்து விட்டு அவரிடம் காசு கொடுக்கும்போது சற்று யோசனையுடன் அங்கிருந்த செய்தித்தாளை காண்பித்து இவர்தான் சார் வந்தார் என்று பத்திரிக்கையில் உள்ள ஒரு புகைப்படத்தை காட்டினார்...
எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.....
அட நம்ம சந்தான பாரதி.
திரைப்படத் துறையில் உள்ள ஒரு நடிகர் கம் இயக்குனருக்கா இவ்வளவு மரியாதை என்று வியந்தேன்..
ReplyForward |
ReplyForward |