Monday, October 15, 2012

RAAGA Release

RAAGA   Audio   வெளியீடு 




                                          நாள் :       12.10.2012   


                                          இடம் :  மதுரை   டவுன்  ஹால்  ரோட்டில்  உள்ள

                                                        ஹோட்டல் ( எத்தனை  ஸ்டார் னு  தெரியலை )


                             முன்னிலை :  சிவ .கண்ணன் .B.E                        
                                                           Principal  Consultant ,Cherrytec ,chennai


                                          வெளியிட்டவர்கள் 
                வள்ளுவர்  இல்லம்  24 ம்  அறையின் சங்கீத மும்மூர்த்திகள் 

                              தூத்துக்குடி   இரா .முத்துக்குமரன் 

                           புதுப்பாளையம்  கனக.அண்ணா அரசு

                            வெள்ளாகுளம்  வெள்ளை .செல்வராசு
                                    (மண் ஆபிசர் ..பக்கத்து  டீ  கடையில் அப்படித்தான்
                                                                                                 கூப்பிடுகிறார்கள் )










அக்டோபர்  12.....இன்னிக்குத்தான்  மாற்றான்  பட ரிலீஸ் .....தெரியும்ல 
                                                                                                                        

   ராகா  பற்றிய  முந்தைய  பதிவிற்கு  சொடுக்கவும் ....http://www.kallurkaran.blogspot.in/2012/03/blog-post.html
 

Sunday, September 30, 2012

நண்பனுக்கு இதய அஞ்சலி

  
 கடந்த மாதம் ஒரு நாள் காலையில் நடை  பயிற்சியை முடித்துக்கொண்டு  வீடு திரும்பியபோது அருப்புகோட்டை அகம்படியர்  complex ல் தங்கியிருந்தபோது  அடிக்கடி சந்தித்த ஆசிரியரை  பார்த்தேன் .என்ன தம்பி எப்படி இருக்கிறீர்கள் ..நண்பர்கள் எங்கிருக்கிறார்கள் ..சந்திப்பது உண்டா  என்று கேட்டார் .நண்பர்கள் எல்லோரும் தொடர்பில் தான்  உள்ளனர்.போன்  மூலமும் வாய்ப்பு கிடைத்தால் நேரிலும் சந்திக்கிறோம் .அவர்கள் இருக்கும் இடத்தை  பற்றியும் தெரிவித்தேன்.அதை  கேட்டு சந்தோசப்பட்ட  அவர்  நாசரை  ரொம்ப விசாரித்தேன் என்று  சொல்லுங்கள் என்று கூறிய அவர் முன்பு நாசர்  செய்த மிகப்பெரிய உதவியையும்  அதற்கு நன்றி  கடன்பட்டிருப்பதையும் சொன்னார்.
                             இரண்டு  நாட்களுக்கு முன்புதான் அவனுக்கு திருமண  நாள் .வாழ்த்து  கூற மொபைலில்  அழைத்த போது  போனை  அவன் எடுக்கவில்லை .நம்பரை மாற்றி விட்டானோ  என்ற சந்தேகமும் எழுந்தது .மாலையில்  நண்பன் செல்வாவை  சந்தித்தபோது  கேட்டேன் .அவனும் ஆமாம் .நம்பரை மாத்தி விட்டான் என்று கூறி வேறு ஒரு நம்பரை கொடுத்து இதில் முயற்சி செய் எனக் கூறினான்.நானும் அழைத்தேன் .மறுபக்கம் ஒரு  சிறுமியின்  குரல். நாசர் இருக்கிறாரா என்று கேட்டேன் .சில வினாடிகள் தயக்கத்திற்கு பிறகு சிறுமி சொன்னாள் ..அவரு ...மூளைக்கு  போற நரம்பு  வெடிச்சு செத்து போயிட்டார் ..

       நாசர் ... டேய் ...நாசர் ...நாசகார சக்தி என்று தான் நண்பர்கள் அன்புடன்  அவனை அழைப்போம் ..

         1992 ல்  அருப்புகோட்டையில்  ஒரு பிரபல  தினசரி நாளிதழின்  நிருபராக ஒட்டன்சத்திரம்  என்ற ஊரில் இருந்து வந்தான்.பக்கத்துக்கு அறையில் தங்கியிருந்த  polytechnic  மாணவர்களிடம் எங்களது அலுவலக ஊழியர் ஒருவருக்கு  தங்க இடம் கேட்டு அவர்களை சம்மதிக்க வைத்து  மாலையில்  வருவார் என்ற  தகவலையும் சொல்லியிருந்தோம்.தவறுதலான அறிமுகத்தில்  நுழைந்த நாசர் அறையை ஆக்கிரமித்து  கொண்டு எங்கள் விரோத பார்வையில் விழுந்த  அவன் மிகச்  சீக்கிரத்தில் அங்கிருந்த 11 அறைகளில் உள்ள அனைவரது  மனதையும் ஆக்கிரமித்த சர்வாதிகாரி..  அவன் ..புன்னகையும் ஒரு  வணக்கமும் மட்டுமே பரிமாறி கொண்ட அனைவரையும் ஒரு அழகான மாலையாக தொடுத்தவன் ...

         நாசர் ...அஞ்சு  அடி உயரம் இருப்பானா ?..சந்தேகம் தான் ...ஆனால்  ஆளுமை திறனில் எங்கள் அனைவரையும் விட அஞ்சு மடங்கு உயர்ந்தவன்.

 எதை  நினைவு  கூற ?......எதை சொல்லி அழ ?

*அருப்புகோட்டை  complex  நண்பர்கள்  என்ற நிரந்தர நட்பு வட்டத்தில்  நான் , ,கணேசன் சார் ,S S ,நடேஷ் ,சிவக்குமார் ,மூர்த்தி ,சேகர் ,ராஜா ,இயற்கை இரவி .RI  வேல்முருகன், மோகன் நைனா ,இளமாறன் ,சீனி ,ரவி எல்லோரையும் இணைத்து  1992 முதல் இன்று வரை ஒன்றாக பயணிக்க செய்ததின் முழு முதல் பிள்ளையார் சுழியே நாசர் தான் ...
உட்கார்ந்திருப்பவர்கள் : இளமாறன் ,சிவகுமார்,நான்,நடேஷ் ,வாட்ச்மேன்  குருசாமி  தேவர் நிற்பவர்கள் .ரவி கணேசன் சார்,SS .மூர்த்தி  மோகன் நைனா ,நாசர் 
                                 
blue  shirt ...நாசர் 
                                  
கொடைக்கானல் டான்ஸ் ...சின்ன  ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது...
                            
*எனது பணி  நிரந்தரத்திற்க்கு தேவையான வணிக இலக்கிற்க்கான போராட்டத்தில் உனது பங்களிப்பு நெஞ்சை விட்டு அகலாதது

*1993ல்  நமது அரசியல் ஆசான்  வைகோ தனிக்கட்சி தொடங்கபோகிறார் என்ற பரபரப்பான சூழலில் அதற்க்கான முதல் கூட்டம் நரிக்குடியில் நடந்த பொது நீ செய்தி சேகரிக்க வும் வைகோவின் உரையை கேட்க்கும் ஆவலுடன் நானும் எனது பைக்கில் குண்டும் குழியும் ஆன ரோட்டில் 30 கிலோமீட்டர் பயணம் செய்து இரவு 2 மணிக்கு திரும்பியது...

*என்னை மாப்பிளை பார்க்க வரும் நாட்களில் ஒரு கையால் சிகரெட் பிடித்துக்கொண்டு மறு கையில் dye  brush  ஆல் எனது தலை முடிக்கு touch up செய்வாயே ..
                                         
எனது  திருமணத்தில் ...சிவாவுடன் நாசர் 
                                    
*எனது தம்பிக்கு மறுநாள்  MIT ல் admission ..முந்தைய நாள் TC வாங்கியாக வேண்டும் .அப்போது எங்கள் இருவரையும் மதுரை பல்கலை கழகத்திற்கு அழைத்து சென்று அதிரடியாக ஊடுருவி சில விளையாட்டு நடத்தி TC வாங்கும் போது  அந்த superintendent  இந்த  அலுவலகத்தில் ஒரே நாளில் வாங்கிய நபர் நீங்களாக தான் இருப்பீர்கள் என்று வியப்புடனும் வெறுப்புடனும்  கொடுத்தது  இன்றும்  கண்ணுக்குள்ளே இருக்கிறது .

*நான் ஊருக்கு சென்ற நாட்களில் எனது நண்பர்கள் செல்வா ,முருகேசன் மற்றும் எனது மைத்துனன் கண்ணன் எல்லோரையும் உடன் பிறந்தவர்களாக கவனித்து கொண்டாயே ..

தம்பி கண்ணன் ,மைத்துனன் கார்த்தி ,கண்ணன் ,நடேஷ் உடன் நாசர் 


*திண்டுக்கல் இன்ஜினியரிங்  கல்லூரியில் எனது மைத்துனன் கண்ணனை எவ்வளவு பொறுப்பாக  admission லும் தொடர் கவனிப்பு கண்காணிப்பு ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தான் ...அதற்கு நன்றிக்கடனாக  கண்ணன் வீடு கிரகபிரவேசத்தில் நாசருக்கு முக்கிய வரவேற்பு கொடுத்து கௌரவித்தான் ....

 எதை  நினைவு  கூற ?......எதை சொல்லி அழ ?

      எத்தனை  நண்பர்கள் இருந்தும் ....எத்தனை  விசுவாசிகள்  இருந்தும் எல்லோரையும் தவிக்க  விட்டு விட்டு   மறைந்து  போனான் .

        மரண  செய்தி எங்களுக்கு  தாமதமாக கிடைத்ததற்கு குடும்ப உறுப்பினர்களின்  சூழ்நிலையும் தகவல் தொடர்பு பிரச்னை யும் காரணமாக இருந்தன. அதை பொருட்படுத்தாது   நான்,கணேசன் சார் , SS ,மூர்த்தி ,நடேஷ் ,சிவக்குமார் ,செல்வா , முத்துக்குமரன்  எல்லோரும் ஒட்டன்சத்திரம்  சென்று  நாசர் வீட்டில்  உள்ளோருக்கு ஆறுதல் சொன்னோம்.தங்க விக்ரகம் போல் மகள்..நாசருக்கு மட்டும் அல்ல...எங்கள் அனைவருக்கும் தான் ..பரிவான வார்த்தைகளும்  நிதிஉதவியும் செய்தாலும் மனது அங்கேயே சுற்றி சுற்றி வருகிறது.நாசர் கடமையை நாங்கள்  இருந்து செய்கிறோம்  என்று ஆறுதல் சொன்னாலும்  மகனை இழந்த அந்த  தாய்  அழுது கொண்டே சொன்னார்கள்

  எத்தனை பேர் வந்து ஆறுதல் சொன்னாலும்  நான் பெத்த பிள்ளை மாதிரி வருமா ? 

Thursday, March 15, 2012

இசை

             பொதுவாக எல்லோருக்கும் தங்களது வீட்டுக்கு  அரசியல்வாதியோ அல்லது  திரையுலக பிரபலமோ அல்லது ஆன்மீக பெரியவரோ விஜயம் செய்த சம்பவம் பற்றி பிறரிடம்  பெருமையுடன் சொல்லிகொள்வார்கள்.எனக்கும் எனது  மனைவிக்கும் ஆத்ம  திருப்தியான விஷயம் என்னவென்றால் பொன்னுசாமி அய்யா என்ற அந்த பிரபலமாகாத  இசை மேதை எங்கள் வீட்டுக்கும் இரண்டு வருடங்களாக வாரம்       இருமுறை வந்து சென்றதுதான்.

           பொன்னுசாமி அய்யா ......ஒல்லியான தேகம்...வெண்ணிற  ஆடை....வெகுளியான சிரிப்பு ...  கர்வமில்லாத பணிவு...இசையில் கரை கண்டாலும்  அடக்கம்...எனது மகளுக்கு வயலின் இசைப்பயிற்சிக்காக 2002  மற்றும் 2003  ஆண்டுகளில்  வீட்டிற்கே வந்து சொல்லிகொடுக்க அழைத்து வந்தேன்.முதலில் அவரை ஒரு இசை அனுபவம்  பெற்ற   முதியவர் என்றே நினைத்தேன்.வீட்டின் ஹாலில் அமர்ந்து அவர் வயலினை மீட்ட ஆரம்பித்தால் நமது மனம் வேறெங்கும் செல்லாது...சுண்டி இழுத்து கட்டிபோடவைக்கும் அவரது இசைத்திறன்..ஒலியை நுட்பமாக கூர்ந்து கேட்க ஆரம்பித்தது எனது 36  ஆவது  வயதில்தான்...

                   ஏழு ஸ்வரங்களையும்,அதன் சுருதி அளவுகளையும் ,72  மேளகர்த்தா ராகங்களையும் ,பாடலின் மெட்டுக்களையும் ...அவரது அனுபவங்களையும் இடையிடையே விவரிக்கும்போது  நானும் எனது மனைவியும்  அடைந்த ஆச்சர்யம் ...வியப்பிற்கு அளவே இல்லை.அவரது திறமைக்கு திரைத்துறையில் சென்றால்  நன்றாக சம்பாதித்திருக்கலாமே  என்று கேட்டதற்கு ,என்னை ஒருவர் அழைத்து சென்றார்..இரண்டு நாட்கள் மட்டும்தான் அங்கே இருக்கமுடிந்தது...அங்கிருந்த மனிதர்களின் பழக்கவழக்கங்கள்  சூழ்நிலை ஆத்மார்த்தமான இசைக்கு ஏற்புடையது அல்ல ..அப்படி ஒரு சம்பாத்தியம் எனக்கு வேண்டாம் என்று கூறிய அவர்  சாதாரண ஓட்டு    வீட்டில் ,மிகவும் எளிமையாக ,நெசவு நெய்யும் அவரது மனைவி மகன்களுடன் வாழ்ந்த நிலை மகாத்மாவின் எளிமைக்கு ஒப்பானது.
                    82  வயதான அந்த இசைஞானி எனது 6  வயது மகளுக்கு இசை கற்ப்பித்த விதம் ,இருவரும் போட்டி போட்டுகொண்டு வயலின் வாசித்த காட்சிகளை இப்போது நினைத்தாலும் எனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிடும்.முந்தைய ஞாயிறு வரை வீட்டிற்கு வந்து  சென்றவர்  இறந்துவிட்டார் என்ற தகவல் இரண்டு நாட்கள் கழித்துதான் எனக்கு கிடைத்தது.உடனே ஓடிச்சென்றேன்.வீட்டின் முன் ஒலைபந்தல்..மரணத்தை உறுதி செய்தது.தெரு முனையிலேயே  பத்து நிமிடம் கனத்த இதயத்துடன் நின்று விட்டு திரும்பிவிட்டேன்.
                                        
                         அவரை அழைத்து சென்று மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள கடையில் அவர் கையாலேயே வாங்கிய வயலின் தற்போது பரணில்  பத்திரமாக இருக்கிறது.அவருக்கு பிறகு தகுந்த இசை ஆசிரியர் கிடைக்காமையும் ,பொருத்தமான நேரமின்மையும் காரணமாயின.

    எனது அம்மா ஓரளவு சங்கீதம் பயின்றவர்.தெய்வீக பாடல்களை பாடுவதில் பிரியம் உள்ளவர்..எனது தம்பி தங்கைகளுடன் விளக்கு முன் அமர்ந்து "அலைபாயுதே கண்ணா, கலைவாணி நின்கருணை , காலை மலர்ந்ததம்மா " போன்ற பாடல்களை   பண்டிகை காலங்களில்     பாடி பூஜை செய்தபிறகே சாப்பிடும் பழக்கம் இருந்தது.ஆனால் அந்த வயதிற்குரிய கடவுள் மறுப்பு கொள்கையின் காரணமாக  பாட்டுப்பாடும்போது       நான் மட்டும்  வெளிநடப்பு செய்து வீட்டு வாசலில் உள்ள திண்டில் உட்கார்ந்திருக்கும்போது அந்த சங்கீதம் என் காதில் ரீங்காரம் இடுவதை தவிர்க்க இயலாது.
            எனது பதிமூன்றாம்    வயதில்   எனது அம்மா B.Ed  சேர்ந்த வருடம் 1978 ல்  கல்லூரியின் மூலமாக அகில இந்திய வானொலி நிலையம்  திருநெல்வேலியின்   இரவு 8  மணிக்கு இளைய பாரதம்  நிகழ்ச்சியில் பாடிய "குருவாயூரப்பா ..கிருஷ்ணா "  என்ற கர்நாடக சங்கீதத்தை  சார்ந்த மலையாள பாடலை சேரன்மகாதேவியில் உள்ள எனது தாத்தா   வீட்டில்  ஆச்சி ,மாமன்மார் ,சித்திமார் எல்லோருடன் முற்றத்தில் ஒரு transistor  ரேடியோ வை சுற்றி உட்காந்து கேட்டோம்.அப்போதிருந்த தொழில் நுட்ப வசதி காரணமாக ஒரே ஒரு மைக் பாடிய இருவருக்கும் வழங்கப்பட்டதால் எனது அம்மாவின் குரல் சுருதி  அளவு கூடும்போது மட்டும் கேட்டது எல்லோருக்கும் ஏமாற்றம் என்றாலும் நினைவுகள் பசுமையாகவே இருக்கின்றன.
                                                         
                   எழுபதுகளில் மெல்லிசை மன்னரின் தாளம்  போட  வைக்கும் மெட்டுகளுக்கும்   ,எண்பதுகளின் என்றென்றும் இசைஞானியின் இசை தென்றலுக்கும் அடிமையான  எனக்கு இன்னும் இசையின் உயிர்ப்பு இவர்களால் மட்டும் அல்லாது நண்பர்களின் ரசனையும் ஊண் தந்துகொன்டுதான் இருக்கிறது.இந்த எல்லா காரணிகளின் தாக்கம் எனது ஆவலை தூண்டி ஒரு இசை தொகுப்பை உருவாக்க  வைத்தது.ராகங்களின் அடிப்படையில் உள்ள திரைப்பட   பாடல்களை தொகுத்து அதில் ராகத்தின் அடிப்படையான  ஆரோகணம்  அவரோகணம் ...அடுத்து அந்த ராகத்தில் உள்ள கர்நாடக சங்கீத கீர்த்தனை ... அடுத்து  திரைப்பட பாடல்கள்  என ஒரு தொகுப்பினை உருவாக்கி கொண்டிருக்கிறேன்.
                    
                          இது என்னை சுற்றி உள்ளவர்களின் இசை ரசனையை சற்று மேம்படுத்தவும்,குழந்தைகளை பாட்டு,நடனம்,கராத்தே,ஓவியம்  என்று நமக்கு தெரியாத மற்றும் முடியாத கலைகளை திணிக்கும் போக்கான தற்கால நவீன நடைமுறை  வாழ்க்கைமுறைகளுக்கு     ஏற்றபடி,  கர்நாடக சங்கீதத்தை கற்கும் குழந்தைகளுக்கு  ராகத்திற்கும் திரை இசைக்கும் உள்ள இடைவெளியை குறைத்து  அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் என்ற நம்பிக்கையில் ஈடுபாட்டுடன் செய்துகொண்டிருக்கிறேன் .
                                 
                         ஆறு  குறுந்தட்டுகள் ஆகும் என்ற கணிப்பில் உருவாகி  கொண்டிருக்கிறது ....எனது சுற்றம் மற்றும் சூழலுக்கு இலவசமாக பிரதி எடுத்து தரவேண்டும் என்ற முயற்சியில் உள்ளேன்...,வேளாண்மை கல்லூரியின் வள்ளுவர்  இல்லத்தில்   24 ம் எண் அறையில் குடியிருந்த சங்கீத மும்மூர்த்திகளான   முத்துக்குமார் ,செல்வா மற்றும் என்னருமை அண்ணா அரசு   அவர்களுக்கு முதல் தொகுப்பினை வெளியிட இருக்கிறேன்.ஏலே என்னிக்கு வருவே ?

Sunday, January 1, 2012

இந்த குட்டையில் கல்லை தூக்கி போட்டவர்கள்-3

தனஞ்செயன் 
                                    
             இந்த  வருடத்தின்  இரண்டாவது ஒய்வு பிரிவு உபசார விழா. .நான் அருப்புகோட்டைக்கு வந்து சரியாக  20  வருடங்கள் ஆகின்றன.1991  ம் வருடம் நவம்பர்  26  ம் தேதி  நான் அருப்புகோட்டையில்   LIC  அலுவலகத்தில் join  பண்ணுவதற்காக  பஸ்ஸை விட்டு இறங்கி அலுவலகம் சென்ற வுடன் கிடைத்த முதல் அறிமுகம்.புதிதாக கிளை துவங்கப்பட்டதால் அலுவலக ஊழியர்களே  மிக குறைவுதான். அறிமுகம் ஆனதும் நமக்கு பக்கத்துக்கு ஊர்க்காரர் நெல்லை மாவட்டம் முக்கூடல் என்றதும்   வெளியூர்  பயம் நீங்கியது.


           எந்த ஒரு ஊரிலும் நாம்   கால் மிதித்தவுடன் நம் உடனடி தேவை   தங்குமிடம்தான்.வெளிநாட்டுக்கு செல்லும்போது விசா  கிடைக்க கேட்கப்படும் கேள்வியே நீங்கள் எங்கு தங்குவீர்கள் ? என்பதுதான்.அருப்புகோட்டையில் இறங்கிய 15 வது நிமிடத்தில் என்னையும் நண்பர் கணேசன் sir  யும் அகம்படியர் மாளிகை என்ற பிரதான இடத்தில் உள்ள mansion  ல் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.இந்த 20  வருட வாழ்க்கைக்கு  அடிப்படையான friendship  base ம் எனது பணிக்கு தேவையான இன்சூரன்ஸ்  வணிக தொடர்பும்  ஏராளமாக கிடைத்த இடம் அதுதான். எனது அருப்புகோட்டை வாழ்க்கையில்   சரியான  வாய்ப்பை  ஏற்படுத்தி கொடுத்தவர்.
               சினிமா ,இலக்கியம்,அரசியல் ,நாட்டு நடப்பு ,மனிதர்கள், கலாச்சாரம்  என்று எல்லா தளத்திலும் போதிய விஷயங்களும், விவாதிக்கும்  திறனும்  உள்ளவர்.எப்போதும் கையில் புத்தகம் இருக்கும்.குறிப்பாக ஆங்கில நாவல்கள்.  உயர்நிலை கல்விமட்டும் தான்  என்றாலும் ஆங்கில புலமை அவர் அளவுக்கு எனது அலுவலகத்தில் யாருக்கும் இல்லை என்பதே உண்மை.அவருடன் நிறைய ஊர் சுற்றியிருக்கிறேன். கிண்டல் ,கேலிக்கு அளவே இருக்காது.

                                                           

                          இன்றுடன் அவருக்கு பணி  நிறைவு. எனது  நண்பர்கள்  முத்துகுமரன் ,செல்வராஜ்., சிவகுமார்  மூவரும் அவரது அழைப்பின் பேரில் வந்திருந்து சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள் . தனஞ்செயன் குடும்பத்தாரும் ,அவரது முகவர்களும் வந்து  வாழ்த்தி மகிழ்வித்தனர்.கல்குறிச்சி முகவர்  முத்துகிருஷ்ணன்    sslc  தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்து புலம்பியபோது  ஆறுதல் சொல்லி ஊக்கபடுத்தி என்னை தேர்ச்சி பெற செய்து இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறார் என்ற கண்ணீர் மல்க கூறி காலில்  விழுந்து ஆசி பெற்றது  தனஞ்செயனுக்கு மட்டும் அல்ல எனது வளர்ச்சி அதிகாரி பணிக்கு கிடைத்த மகுடம் .
                                                    அவர் ஒய்வு பெறுவதற்கு இரண்டு வருடம் முன்பே இரண்டு மகள் மற்றும் மகனுக்கு திருமணம்,சொந்த வீடு  என்ற எல்லா commitment  யும் முடித்தவர்.எப்போதும் கிண்டலுடன் கூடிய பேச்சும்,மகிழ்ச்சியான மனோபாவத்துடன் இருப்பவர்.அதற்கான காரணத்தை தனது பேச்சில்  எதையும் என்னிடம் எதிர்பாக்காத மனைவியும் ,பிக்கல் புடுங்கல் இல்லாத எனது குழந்தைகளும் தான் எனது மனநிறைவுக்கு காரணம்  என கூறியது   அனைவரையும்  மனம் நெகிழ வைத்தது. 
      31.12.2011