Thursday, March 15, 2012

இசை

             பொதுவாக எல்லோருக்கும் தங்களது வீட்டுக்கு  அரசியல்வாதியோ அல்லது  திரையுலக பிரபலமோ அல்லது ஆன்மீக பெரியவரோ விஜயம் செய்த சம்பவம் பற்றி பிறரிடம்  பெருமையுடன் சொல்லிகொள்வார்கள்.எனக்கும் எனது  மனைவிக்கும் ஆத்ம  திருப்தியான விஷயம் என்னவென்றால் பொன்னுசாமி அய்யா என்ற அந்த பிரபலமாகாத  இசை மேதை எங்கள் வீட்டுக்கும் இரண்டு வருடங்களாக வாரம்       இருமுறை வந்து சென்றதுதான்.

           பொன்னுசாமி அய்யா ......ஒல்லியான தேகம்...வெண்ணிற  ஆடை....வெகுளியான சிரிப்பு ...  கர்வமில்லாத பணிவு...இசையில் கரை கண்டாலும்  அடக்கம்...எனது மகளுக்கு வயலின் இசைப்பயிற்சிக்காக 2002  மற்றும் 2003  ஆண்டுகளில்  வீட்டிற்கே வந்து சொல்லிகொடுக்க அழைத்து வந்தேன்.முதலில் அவரை ஒரு இசை அனுபவம்  பெற்ற   முதியவர் என்றே நினைத்தேன்.வீட்டின் ஹாலில் அமர்ந்து அவர் வயலினை மீட்ட ஆரம்பித்தால் நமது மனம் வேறெங்கும் செல்லாது...சுண்டி இழுத்து கட்டிபோடவைக்கும் அவரது இசைத்திறன்..ஒலியை நுட்பமாக கூர்ந்து கேட்க ஆரம்பித்தது எனது 36  ஆவது  வயதில்தான்...

                   ஏழு ஸ்வரங்களையும்,அதன் சுருதி அளவுகளையும் ,72  மேளகர்த்தா ராகங்களையும் ,பாடலின் மெட்டுக்களையும் ...அவரது அனுபவங்களையும் இடையிடையே விவரிக்கும்போது  நானும் எனது மனைவியும்  அடைந்த ஆச்சர்யம் ...வியப்பிற்கு அளவே இல்லை.அவரது திறமைக்கு திரைத்துறையில் சென்றால்  நன்றாக சம்பாதித்திருக்கலாமே  என்று கேட்டதற்கு ,என்னை ஒருவர் அழைத்து சென்றார்..இரண்டு நாட்கள் மட்டும்தான் அங்கே இருக்கமுடிந்தது...அங்கிருந்த மனிதர்களின் பழக்கவழக்கங்கள்  சூழ்நிலை ஆத்மார்த்தமான இசைக்கு ஏற்புடையது அல்ல ..அப்படி ஒரு சம்பாத்தியம் எனக்கு வேண்டாம் என்று கூறிய அவர்  சாதாரண ஓட்டு    வீட்டில் ,மிகவும் எளிமையாக ,நெசவு நெய்யும் அவரது மனைவி மகன்களுடன் வாழ்ந்த நிலை மகாத்மாவின் எளிமைக்கு ஒப்பானது.
                    82  வயதான அந்த இசைஞானி எனது 6  வயது மகளுக்கு இசை கற்ப்பித்த விதம் ,இருவரும் போட்டி போட்டுகொண்டு வயலின் வாசித்த காட்சிகளை இப்போது நினைத்தாலும் எனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிடும்.முந்தைய ஞாயிறு வரை வீட்டிற்கு வந்து  சென்றவர்  இறந்துவிட்டார் என்ற தகவல் இரண்டு நாட்கள் கழித்துதான் எனக்கு கிடைத்தது.உடனே ஓடிச்சென்றேன்.வீட்டின் முன் ஒலைபந்தல்..மரணத்தை உறுதி செய்தது.தெரு முனையிலேயே  பத்து நிமிடம் கனத்த இதயத்துடன் நின்று விட்டு திரும்பிவிட்டேன்.
                                        
                         அவரை அழைத்து சென்று மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள கடையில் அவர் கையாலேயே வாங்கிய வயலின் தற்போது பரணில்  பத்திரமாக இருக்கிறது.அவருக்கு பிறகு தகுந்த இசை ஆசிரியர் கிடைக்காமையும் ,பொருத்தமான நேரமின்மையும் காரணமாயின.

    எனது அம்மா ஓரளவு சங்கீதம் பயின்றவர்.தெய்வீக பாடல்களை பாடுவதில் பிரியம் உள்ளவர்..எனது தம்பி தங்கைகளுடன் விளக்கு முன் அமர்ந்து "அலைபாயுதே கண்ணா, கலைவாணி நின்கருணை , காலை மலர்ந்ததம்மா " போன்ற பாடல்களை   பண்டிகை காலங்களில்     பாடி பூஜை செய்தபிறகே சாப்பிடும் பழக்கம் இருந்தது.ஆனால் அந்த வயதிற்குரிய கடவுள் மறுப்பு கொள்கையின் காரணமாக  பாட்டுப்பாடும்போது       நான் மட்டும்  வெளிநடப்பு செய்து வீட்டு வாசலில் உள்ள திண்டில் உட்கார்ந்திருக்கும்போது அந்த சங்கீதம் என் காதில் ரீங்காரம் இடுவதை தவிர்க்க இயலாது.
            எனது பதிமூன்றாம்    வயதில்   எனது அம்மா B.Ed  சேர்ந்த வருடம் 1978 ல்  கல்லூரியின் மூலமாக அகில இந்திய வானொலி நிலையம்  திருநெல்வேலியின்   இரவு 8  மணிக்கு இளைய பாரதம்  நிகழ்ச்சியில் பாடிய "குருவாயூரப்பா ..கிருஷ்ணா "  என்ற கர்நாடக சங்கீதத்தை  சார்ந்த மலையாள பாடலை சேரன்மகாதேவியில் உள்ள எனது தாத்தா   வீட்டில்  ஆச்சி ,மாமன்மார் ,சித்திமார் எல்லோருடன் முற்றத்தில் ஒரு transistor  ரேடியோ வை சுற்றி உட்காந்து கேட்டோம்.அப்போதிருந்த தொழில் நுட்ப வசதி காரணமாக ஒரே ஒரு மைக் பாடிய இருவருக்கும் வழங்கப்பட்டதால் எனது அம்மாவின் குரல் சுருதி  அளவு கூடும்போது மட்டும் கேட்டது எல்லோருக்கும் ஏமாற்றம் என்றாலும் நினைவுகள் பசுமையாகவே இருக்கின்றன.
                                                         
                   எழுபதுகளில் மெல்லிசை மன்னரின் தாளம்  போட  வைக்கும் மெட்டுகளுக்கும்   ,எண்பதுகளின் என்றென்றும் இசைஞானியின் இசை தென்றலுக்கும் அடிமையான  எனக்கு இன்னும் இசையின் உயிர்ப்பு இவர்களால் மட்டும் அல்லாது நண்பர்களின் ரசனையும் ஊண் தந்துகொன்டுதான் இருக்கிறது.இந்த எல்லா காரணிகளின் தாக்கம் எனது ஆவலை தூண்டி ஒரு இசை தொகுப்பை உருவாக்க  வைத்தது.ராகங்களின் அடிப்படையில் உள்ள திரைப்பட   பாடல்களை தொகுத்து அதில் ராகத்தின் அடிப்படையான  ஆரோகணம்  அவரோகணம் ...அடுத்து அந்த ராகத்தில் உள்ள கர்நாடக சங்கீத கீர்த்தனை ... அடுத்து  திரைப்பட பாடல்கள்  என ஒரு தொகுப்பினை உருவாக்கி கொண்டிருக்கிறேன்.
                    
                          இது என்னை சுற்றி உள்ளவர்களின் இசை ரசனையை சற்று மேம்படுத்தவும்,குழந்தைகளை பாட்டு,நடனம்,கராத்தே,ஓவியம்  என்று நமக்கு தெரியாத மற்றும் முடியாத கலைகளை திணிக்கும் போக்கான தற்கால நவீன நடைமுறை  வாழ்க்கைமுறைகளுக்கு     ஏற்றபடி,  கர்நாடக சங்கீதத்தை கற்கும் குழந்தைகளுக்கு  ராகத்திற்கும் திரை இசைக்கும் உள்ள இடைவெளியை குறைத்து  அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் என்ற நம்பிக்கையில் ஈடுபாட்டுடன் செய்துகொண்டிருக்கிறேன் .
                                 
                         ஆறு  குறுந்தட்டுகள் ஆகும் என்ற கணிப்பில் உருவாகி  கொண்டிருக்கிறது ....எனது சுற்றம் மற்றும் சூழலுக்கு இலவசமாக பிரதி எடுத்து தரவேண்டும் என்ற முயற்சியில் உள்ளேன்...,வேளாண்மை கல்லூரியின் வள்ளுவர்  இல்லத்தில்   24 ம் எண் அறையில் குடியிருந்த சங்கீத மும்மூர்த்திகளான   முத்துக்குமார் ,செல்வா மற்றும் என்னருமை அண்ணா அரசு   அவர்களுக்கு முதல் தொகுப்பினை வெளியிட இருக்கிறேன்.ஏலே என்னிக்கு வருவே ?

5 comments:

  1. உன்னுடைய இசை ஆர்வத்தின் இரகசியம் இப்போது தான் புரிகிறது! இசையின் இரகசியங்களை எங்களுக்கும் கற்றுக்கொடுக்கும் உன் முயற்சிக்கு நன்றி! தோழனே!

    ReplyDelete
  2. இசையால் வசமாகா இதயம் எது ? புல்லும்,புழுவும், பறவையுமே இசைக்கு அசையும் எனும்போது நாமெல்லாம் இசைக்கு அடிமை என்பதில் என்ன அதிசயம்?

    உங்களது பழக்கத்தாலேதான் சுஜாதா ,பாலகுமாரன் போன்றவர்களின் எழுத்தையும், இளையராஜா,தேவேந்திரன் போன்றோரின் இசையையும் ரசிக்கக் கற்றுக்கொண்டவன் நான்... உங்களிடம் இருந்து ஒரு உன்னத இசைபடைப்பு அனுபவமொழியாக வரப்போவதை என்னும்போதே தேன் வந்து பாய்வதைப்போல் உணர்கிறேன்.!
    ஒரே ஒரு நெருடல்...குளியலறை பாடகனை சங்கீத மூமமூர்த்திகளில் ஒருவன் என விளிப்பது வார்த்தை ஜாலத்திற்கு என்றே எடுத்துகொண்டாலும் ரொம்ப ஓவர் ....அசோக்.

    ReplyDelete
  3. கல்லூர்கரனுக்குள்ளும் ஒரு எங்க ஊரு பாட்டுக்காரன்
    மனிதனின் பரிணாம வளர்ச்சி என்பது உடல் அளவில் மட்டும் இல்லை உள்ளத்தை ,மனதை மலர வைக்கும் நிகழ்வுகள் மூலம் நாம் தூண்டபெருகிறோம்,தூண்டுவோம் என்பதற்கு நீரும் ஒரு எ.கா
    வாழ்த்துக்களுடன் அருள்

    ReplyDelete
  4. ஒவ்வொரு கலைஞனுக்கும் பின்னால் ஒரு ரகசியம் இருப்பதை உறுதி செய்துள்ளாய் கல்லூர் இசை ஞானியே! உன் நெஞ்சில் குடியிருக்கும் SPB புகழ் செல்வா, great mkumaranக்கு அப்புறம் அடியேனுக்கும் உங்களது இசை அமுதை அருளுமாறு வேண்டுகிறேன்.

    காத்திருக்கும்
    நடேசன்

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல பதிவு....
    நினைவுகளை பதிவு செய்வது ரொம்ப கடினம் ஆனால் உனக்கு அழகாக மற்றும் கோர்வையாக எழுத, பதிவு செய்ய வருகிறது உனது பதிவுகல் தொடர வாழ்த்துக்களுடன் ....குட்டி

    ReplyDelete